Thursday, December 1, 2011

நீ தின்று எஞ்சிய நினைவுகளுடன்...

3 கருத்துக்கள்


நீ தந்த காதலால்
சிறுபிள்ளையாய்
அந்த கடற்கரையில் கீறி விளையாடியிருக்கிறேன்..
இருள் மண்டி
மெளனம் விரிந்து கிடக்கும்
ஆற்றங்கரையில்
தனிமையில் காதல் மென்றிருக்கிறேன்..
முகிற் புகார்களுக்கிடையில்
நிலா ஒழிந்து விளையாடும் நாட்களில்
கண் சிமிட்டும் நட்சத்திரங்களை
ரசித்திருக்கிறேன்..
மழை ஓய்ந்த நாட்களில்
இலை வடியும் துளிகளை
விரல்களால் சேர்த்து மகிழ்ந்திருக்கிறேன்..
இரவுகளை தொலைத்திருக்கிறேன்..

ஏன் இத்தனை மாற்றம்
ஏன் இத்தனை காதல்
எந்த அளவு பிடிக்கும் என்று
சொல்லிக் காட்ட
என் மொழியால் முடியாதென்று திணறியிருக்கிறேன்!!!
அத்தனையும் தெரிந்தும்
மெளனமாய் விலகிச் செல்கிறாய்..

நீ தின்று எஞ்சிய நினைவுகளுடன் நான்

ப்ரியம் அத்தனை சுகமானது.. 

மா.குருபரன்

2-12-2011



Sunday, September 25, 2011

பிரிவும் காத்திருப்பும்..

3 கருத்துக்கள்


கொண்டல் மர நிழல்
தீனி பொறுக்கிவிட்டு
ஏதேதோ பேசிக்கொண்டிருக்கின்றன
குருவிகள்..
மெளனம் கலைந்துவிட்ட பின்னும்
மீண்டும் மெளனம்..
குருவிகளுக்குள் இத்தனை காதலா!!
சின்ன சின்ன சீண்டலும்
இடையிடையே முத்தமுமாய்
எப்படியெல்லாம் காதல் செய்கிறது
குருவிகள்!!!

சிறகினால் சீண்டுவதுவும்
உச்சி முகர்ந்து
முத்தம் கொடுப்பதுமாய்
எத்தனை மணிநேரம்
கொண்டாடுகின்றன..
பிரிவும் காத்திருப்பும்
இத்தனை ப்ரியத்தை தூண்டுமா!!

அந்த ஒற்றைக் குருவி
அதன் காதலுக்காய்
பல மணிநேரம் காத்திருந்திருக்கும்,
மற்றயதும் பல மணி நேரம் தேடியிருக்கும்..
காத்திருப்புக் காதலின் வலியை
எப்படியெல்லாம் கொண்டாடுகிறது
குருவிகள்..!!

பூமியில் முகம் புதைத்து
சிறகு பரப்பி தூங்குகிறது
ஒரு குருவி...
நிட்சயமாக அது
பெண்குருவியாய் தான்
இருக்க வேண்டும்..
மற்றயது ஓடிவந்து
அதன் சிறகோடு ஒட்டியபடி
தூங்குகிறது..
இடையிடையே சிறகுதட்டி
அதை சீண்டுகிறது...

அந்த மரக்கிழையிலேயே
சின்ன கூடு கட்டுகின்றன..
அதன் முற்றத்தில்
காதல் செய்கின்றன..

பிரிவும் காத்திருப்பும்
இத்தனை ப்ரியத்தை தூண்டுமா!!


மா.குருபரன்
25-09-2011





Thursday, August 18, 2011

ஒருதலைக் காதல்...

0 கருத்துக்கள்

மெளனத்தின் இடைவெளியில்
மொழியை பிரசவிக்க தவிக்கிறது
காதல்..

எதிரும் புதிருமாய்
சந்தித்த பின்னும்,
நீண்டு கிடக்கும் மெளன வெளி...

பேசக்கிடைத்த போதும்
வரண்டு கிடக்கும் மொழி,
விடைபெற்று போனதும்
இரவுகளில் வலிக்கும்....

ராப்பொழுதுகளில் ஊார்ந்துவரும்
சோக சங்கீதத்தில்
வலி
சோகமாய் கரையும்....

போதை ஏறிய நாளொன்றின்
நிலாக்காயும் நேரம்,
காதல் கனவுகள்
ஓவியம் வரைந்து கொண்டிருக்கும்....
அங்கும்
அவள் வருவாள் போவாள்
ஒரு கணப்பாழுதில்
காதல் பேசப்படிருக்கும்...

தூங்காமல்
தூர்ந்து கிடக்கும்
இரவுவொன்னறில்,
அவள் பற்றி
மனசு பேசிக் கொண்டிருந்திருக்கும்...

மனம்
மென்மையை ரசிச்திருக்கும்...
குளிர்ச்சியை அணைத்தபடி
குடையற்ற நாளொன்றின்
மழைப் பொழுதுகளில்
நனைய பிடித்திருக்கும்....

அவள் வந்துவிடப்போகும்
அந்த நிமிடங்களில்
மனசு படபடத்திருக்கும்....

மெளனங்களின் இடைவெளியில்
காதலின் மொழி
பேசப்படாமல்
துடித்திருக்கும்...

மா.குருபரன்
19-05-2011


குறிப்பு: ஓருதலைக் காதலில் சிக்கி தவித்தவர்கள்... இதை அனுபவத்திருப்பின் சொல்லிவிட்டுப் போங்கள்.




Tuesday, August 16, 2011

மதங்களையும் மன்னர்களையும் கடவுள் ஏன் படைத்தான்/ள்??

2 கருத்துக்கள்





அலாரம் அடித்து காலையில் எழுந்த நாட்களைவிட சேவலின் கூவலில் கண்விழித்த நாட்கள் தான் அதிகம். முருக்கம் பூக்களை தின்றபடி குறுகுறுத்துக் கொண்டிருக்கும் பச்சைப் புறாக்களுக்கு கல்லெறிந்து சண்டை பிடித்து நாளின் முதலாவது செயற்பாட்டை தொடங்கிய நாட்கள் தான் அதிகம். அணிலும் புலுனியும் அங்குமிங்கும் திரிய இரண்டு காலில் பாய்ந்து தாவும் "பப்பி"யுடன் மல்லுக்கட்டிவிட்டு பள்ளிக்கூடம் சென்ற நாட்கள் தான் அதிகம். எத்தனை மரங்கள்,எத்தனை மலர்கள்,எத்தனை பட்சிகள்,எத்தனை இசைகள்... நாளை குறித்த அச்சமற்ற விடியல்களுடன்தான் என் வாழ்வில் அதிக நாட்கள் விழித்திருக்கிறேன்.  

என்னுடைய பதின்ம வயதுகளின் உலகம் வித்தியாசமானது. உலகின் அத்தனை சுகங்களும் என் தேசத்தில் இருப்பதை உணர்ந்த காலம் அது. வயல்களும்,வாய்க்காலும்,குளங்களும்,காடுகளும் என இயந்திரமற்ற சொர்க்கத்தை உணர்த்திய காலம் அது. அப்பாழுதெல்லாம் கடவுள் கோயில்களுக்குள் மட்டும் தான் இருந்தார். தேவாலையங்களுக்குள் மட்டும் தான் இருந்தார். தேவாரமும் திருப்பலிப்பாடல்களும் பாடித்திரிந்த காலம் அது. எல்லாமே என்னுடைய மதமாக இருந்தது..

இன்று என் பதின்மங்களை தொலைத்திருக்கிறேன். இயந்திர உலகின் சில்லுகளுக்கிடையில் என் தேசத்தின் அத்தனை சுகங்களும் இல்லாது போய்க்கிடக்கிறது. சேவல் எப்படியிருக்கும் என்று இணையங்களில் தேடி பார்த்து ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நாயுண்ணிப் பழம்,சூரைப் பழம் இப்படி வீதியாரங்களில் கிடக்கும் அத்தனை பழங்களையும் பிடுங்கி தின்று பழகிக்கிடந்த நான், இந்தப்பழங்களில் இது இருக்கிறது.. இது கூடாது..இது நல்லது என்ற அட்டவணைக்குள் தள்ளப்ட்டுக்கிறக்கிறேன்…

எதையும் என் இஸ்டப்படி செய்யும் என் பதின்ம வயது தேசத்தில் என்னை மன்னர்களும் அடக்கவில்லை மதங்களும் அடக்கவில்லை. அல்லது என்னை மன்னர்களும் அச்சுறுத்தவில்லை மதங்களும் அச்சுறுத்தவில்லை. என் கிராமத்து வீதிகளை பிரிந்து நகரத்து வீதிக்குள் நுழைந்த பின் தான் கடவுள்கள்மேல் அத்தனை வெறுப்பும் மன்னர்கள் மேல் அத்தனை அச்சமும் பற்றிக் கொண்டுள்ளது.

சிறிங்கா அரசால் தமிழர்கள் கதறக்கதற கொலை செய்யப்படுவதை பார்த்து பார்த்து மரத்துப் போய்விட்ட மனம் இன்று ஒரு தடவை அதிர்ந்து தான் போனது. “யூடியுப்” இல் எதேட்சையாக ஒரு வீடியாவை பார்க்க நேநரிட்டது. மதத்தின் பெயரால் கொலை செய்யப்படுகிறார்கள். இஸ்லாத்திற்கெதிராக அவர்கள் செயற்பட்டதாக அவர்கள் மேல் குற்றச்சாட்டு. “அல்லாகு அக்பர்” “அல்லாகு அக்பர்” என்று ஒருவன் தொண்டை கிழிய கத்துகிறான். இன்னாருவன் கழுத்தை "சர சர" வென அறுக்கிறான். இந்த தொடர்ச்சியில் நிறை வீடியாக்கள். பெண்களுக்கு வீதிகளில் வைத்து அடிக்கும் தலிபான்கள்,. வீதிகளில் வைத்து தண்டனை என்ற பெயரில் நிறைவேற்றப்படும் கொலைகள், தசை வெடித்து ரத்தம் பீறிட வழங்கப்படும் கசையடிகள் இப்படி நிறைய. எல்லா வன்முறைகளுக்கும் முன் ஒருவன் ஆவேசம் கெகாண்டு “அல்லாகு அக்பர்” “அல்லாகு அக்பர்” என்று கத்துவது இன்னமும் எனது காதுகளில் இரைந்து கெகாண்டே இருக்கிறது.


இது றம்ளான் மாதம். இஸ்லாமியர்களின் புனித மாதம். இஸ்லாமிய நாடுகளில் இந்த நாட்களில் பொது இடங்களில் பகல் வேளைகளில் நீர் அருந்தவேவா உணவு உண்ணவேவா கூடாது. அப்படி ஏதாவது அருந்தினால் ஒரு மாத சிறையும் தண்டமும் அறவிடப்படுமாம். நீர்ருந்திய பலர் சிறைகளுக்குள் தள்ளப்ட்டுள்ளதாக செய்திகள் கூட வந்திருக்கின்றன.
நீ உணவுண்ணாமல், நீர் அருந்தாமல் இருக்கிறாய் என்பதற்காக அடுத்தவனும் செய்யக்கூடாது என்று சொல்வது மதமா?? "அல்லா" என்பவன் யார்?? மனிதங்களை வதைக்க சொல்லவும், தடைகள் விதிக்கவும் அவன் யார்?? ரத்தம் பீறிட ஒருவன் கதறக்கதற சிரசை அறுத்தெறிவதென்றால் என்பெயரை சொல்லி செய்.. உன் பாவங்கள் போய்விடும் என்று சொல்லி வைத்துள்ள “அல்லா” தான் கடவுளா??.  றம்ளான் காலத்தில் நீர்ருந்துபவனை சிறையில் தள்ளவிடு என்று சொல்லி வைத்துள்ளவன் தான் கடவுளா?? இவன் தான் எங்களை படைத்தானா?? ஒரு அரக்கனின் படைப்பா நாங்கள்?? என்ற எண்ணங்கள் என் மனதை துளைத்தபடி இருக்கிறது. 

மதம் இவ்வளவு வன்முறையாது என்று இந்த இயந்திர உலகம் தான் எனக்கு காட்டிக் கொடுத்துள்ளது. திருநீற்றையும் குங்குமத்தையும் முகம் முழுக்க தடவியபடி அரிவாள் கோடாலிகளுடன் முஸ்லிம்களை வெட்டி வீசியெறிந்தபடி ஒருவன் போகிறதன் பாரதத்தில். திருநீற்றுக்குள்ளும் ஆயிரம் வித்தியாசங்கள். அதற்குள்ளும் ஏற்றத்தாழ்வுகள். இது தான் இந்து மத்த்தின் போதனையா?? அசுரர்களை வதம் செய்ய கடவுள் பிறப்பெடுத்து வருகிறாராம். அப்படியானால் அந்த அசுர்ர்களை படைத்த்து யார்?? அசுரர்களை இயற்கை மரணம் அடைய செய்ய முடியாதவன் தான் கடவுளா??

சிலுவைப் போர்களாகவும், ஜிகாத்துகளாகவும், இந்துத்துவ வெறியாகவும், பெளத்த பேரினவாதமாகவும் இருக்கும் மதங்கள் மனிதனுக்கு தேவை தானா??? ஏன் இவற்றை படைத்தவன் தந்தான்?? மனிதன் மனிதனாக இருப்பதற்கு மதங்கள் எதற்கு?? மதங்கள் வெறிகொண்டலையாத என் வன்னியின் தெருக்கள் எனக்கு வேணும் என்று கனத்துக் கொண்டிருக்கிறது மனம்.

இன்னாரு வீடியோ… அது வித்தியாசமானது… ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கி தவிக்கும் சாமானியர்கள் பற்றியது. மன்னர்களின் அடியாட்கள் அவனை துன்புறுத்துகிறார்கள். அடிக்கிறார்கள்,சுட்டு தள்ளப்படுகிறார்கள். முரண் கொண்ட எத்தனை தண்டனைகளை வழங்குகிறார்கள். 

இந்த மன்னர்கள் எல்லாம் எப்படி உருவானார்கள்?? எங்கிருந்து உருவானார்கள்?? இரு கைகளையும் பின்புறமாக கட்டி,கண்களை இறுக கட்டி, சுட்டுத்தள்ளுமாறு மன்னன் உத்தரவிடுகிறான்.. அதே போல் செய்கிறான் அடியாள்.அந்த அடியாள் மனிதத்தை தொலைத்த்து எப்படி?? அல்லது அவனது மனிதத்தை தின்றது எது?? மனிதத்தை தின்னும் மதங்களும் மன்னர்களும் எதற்கு??

வாழ்வியலில் இருந்துவிடப்பாகும் இந்த மணித்துளிகளை மட்டும் தானே நாங்கள் யாசிக்கிறேறாம். இதற்கு மதங்களும் மன்னர்களும் எதற்கு?? 

எனது தெருக்களில் நான் அறிந்திராத கடவுள் வந்து குடியிருக்கிறார். கடவுளுக்கு ஆயுதம் தாங்கிய படை பாதுகாப்பு. பாடசாலை முடிந்தவுடன் பட்டாம் பூச்சி பிடிப்பதற்கு ஓடித்தரிந்த பற்றைகளுக்குள் நான் இப்பாழுது செல்ல முடியாது. மன்னரின் அடியாட்கள் மிரட்டுகிறார்கள். "பொன்வண்டுகள்" பிடிக்க ஏறித்திரிந்த "கொண்டல்" மரங்கள் பல தறிக்கப்ட்டுவிட்டன  மன்னரின் அடியாட்களிற்கு பாதுகாப்பில்லையாம். 

இப்பொழுதெல்லாம் என் தேசத்தில் இயற்கையை ரசிக்க அஞ்சுகிறது மனம், மதங்களை நினைக்க பதைபதைக்கிறது மனம், வயல்கள் வாய்க்கால்கள் காடுகள் குளங்கள் என எல்லாமே அச்சத்தை தருகின்றன.. ஊஞ்சல் ஆடிய ஆல மர விழுதுகள் விரக்த்தியாகிக்கிடக்கின்றன... தன் குழந்தைகள் இல்லாத தெருக்களால் எந்த நாவல் மரமும் பழுத்துக் கொட்டுவதில்லை... மாம்பழங்களை திருடுவதற்கு இப்பொழுதெல்லாம் வெளவால்கள் வருவது கிடையாது. கிணற்றடி கிடுகு தட்டியில் இருந்து கத்துவதற்கு புலுனிகள் கிடையாது!!!

என் வன்னியின் சுதந்திரத்தையெல்லாம் பறித்தெடுத்து... நான் அறிந்திராத கடவுளைத் திணிக்கும் மன்னன் ராஜபக்ஷவின் தேவைதான் என்ன!! இவர்களையெல்லாம் கடவுள் ஏன் படைத்தான்!!!

இப்படித்தானே ஒவ்வாரு தேசத்திலும் மன்னர்கள் மனிதங்களின் சுதந்திரங்களை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். மதங்களையும் மன்னர்களையும் கடவுள் ஏன் படைத்தான்/ள்??

மனிதத்தை நேசிப்போம். எங்களெங்கள் தேசத்தில் எமது சுதந்திரம் தேவையென்று உரக்க சொல்லுவோம்.

 மா.குருபரன்.
17-08-2011



Wednesday, August 3, 2011

விம்பம்

4 கருத்துக்கள்

தமிழும் அதன் நிலமும்
இருளாக்கப்படுகிறது என்கிறேன்,
இரவுகள் இனிமையானவை என்று
கவி பாடிக் கொண்டிருக்கிறாய்...
நானும் நீயும்
தவண்டு,
புட்டிப்பால் குடித்து புரண்டெழுந்து,
எம் தமிழ்
கூவித் திரிந்த தெருக்களெல்லாம்,
எனதும் உனதும்
மொழி நசுக்கப்ட்டு
பிரித் ஓதப்பட்டுக் கொண்டிருக்கிறது என்கிறேன்,
புத்தன் தமிழுக்கு எதிரியில்லை என்று
அறம் சொல்கிறாய்...

உனக்காய் நீ தமிழ் எழுதினால்
இலக்கியவாதி,
தமிழுக்கும் நிலத்திற்குமாய்
நான் எழுதினால்
பயங்கரவாதி...

தமிழும் அதன் நிலமும்
இருளாக்கப்படுகிறது என்கிறேன்.....


தேமதுரத்தமிழ் என் தாய் மொழி....


மா.குருபரன்

03-08-2011


Sunday, July 24, 2011

ஓய்ந்துவிட்ட கொலுசு...

2 கருத்துக்கள்

நிசப்தம் நிரம்பி
மெளனம் குடிகொண்ட
இந்த நாட்கள்,
நாளைகளில்
நினைவுகளாக்கப்ட்டிருக்கும்....
எனதும் உனதும் வார்த்தைகள்
அங்கு பேசிக்கொண்டிருக்கும்....
குழந்தையாய்
துள்ளிக் குதித்த காதல் - அங்கு
நினைவற்று வீழ்ந்து கிடக்கும்...

பொய்த்துப்போன - உன்
வார்த்தைகளின் மொழி
இந்தக் குழந்தைக்கு
புரியப்போவதில்லை....
என் மார்போடு
முகம் புதைத்து
அழுதுகொண்டிருந்த
இந்த காதல் குழந்தையின் வலி
உனக்கும் புரியப்போவதில்லை...
நிறங்கள் வெளிறிப்போய்
நீல வானமாய்
நீண்டு கிடக்கும்
வானவில்லைப் போல
மெளனம் விழுங்கி
கண்ணீர் வற்றி
மூச்சிரைத்து கிடக்குதடி
நீ வளர்த்த காதல்....


மா.குருபரன்
20-07-2011


Sunday, July 17, 2011

"தேவதன்களின் திருட்டுத்துணி" _ பனை பதிப்பகம்

0 கருத்துக்கள்
நாணத்தின் இரண்டு பக்கங்கள்

கவின்மலர் புருசன விட்டிற்றுப்போய் கனவருசம் ஆகின பிறகு முரளிதாஸ் என்று அழைக்கப்படுகிற கர்ணநேசனுக்கு கவின் மலரில பிளான் வருகுது....அகிலேந்திரன், ஷேபசத்திரன் எண்டு கர்ணநேசனுக்கு இருக்கிற பிரண்டுகளால கர்ணநேசன் அவேக்குள்ள ஒண்டுக்க ஒண்டாகிறார்.  
சரி விசயத்துக்கு வருவம்... சிவப்பு கலர் பல்சர்ல பிரண்டு ஒருத்தன் கொண்டுவந்துவிட தன்னைதானே கண்ணாடில பாக்காம பேனையோட கதை எழுத மேசையில குந்துறதோட கதைக்குள்ள என்டராகிறான் கர்ணநேசன். 

வசதி இல்லாத காலத்திலையும் அவங்கள் இவன படிப்பிச்சு எழுதுறத்துக்கு வாய்புகளெல்லாம் ஏற்படுத்தி குடுத்தவங்கள். இவன மட்டுமில்ல நிறைய பேர. கர்ணநேசன் எழுத்தில புலி. நிறைய விசையங்கள எழுதினவன்.இப்ப அவங்கள் இல்ல.  இந்த நேரத்தில தான் அவனுக்கு அகிலேந்திரனும் ஷேபசத்திரனும் கைகுடுக்க முன்வருகினம். இந்த ரெண்டு பேரும் இவன மாதிரியே எழுதுறாக்கள் தான். அவே வெளிநாட்டில இருந்து எழுதுறாக்கள். அதில ஷேபசத்திரன் காத்துவளம் பாத்து மூத்திரம் அடிக்க தெரியாத காலத்திலையே நாட்ட விட்டு ஓடினவன். அகிலேந்திரன் கடைசி சண்ட தொடங்கின காலத்தில ஓடினவன். அகிலேந்திரனும் ஷேபசத்திரனும் தமிழ் நாட்டில ஒரு எழுத்து பிஸ்னஸ் தொடங்கி இப்ப ஒவ்வொரு நாட்டிலையும் ஒருத்தன் இரண்டு பேரோட சுமாரா பிஸ்னஸ் போய்க் கொண்டிருக்கு. நாலு பேரோட கொழும்பிலையும் புதுசா பிஸ்னஸ் தொடங்கி இருக்கிறாங்கள். இந்த நேரத்தில தான் இவேக்கு கர்ணநேசன ஞாபகம் வருகுது.. உடன கர்ணநேசன தொடர்பெடுத்து பிஸ்னஸ பற்றி சொல்லினம். முதல்ல கர்ணநேசனுக்கு ஓருமாதிரி தான் இருக்கு பிறகு பாத்தான் இது தான் நேரம்... கொஞ்ம் பேமசுமாகலாம் காசும் கையில வந்த மாதிரி இருக்கும் எண்டு பிஸ்னஸ் அக்ரிமன்டும் போட்டிற்றான். 

அகிலேந்திரனுக்கும் ஷேபத்திரனுக்கும் வெத்திலையும் வீணையுமெண்டா சுப்பர் விருப்பம். ரண்டையும் அடிக்கடி உயத்திதான் கதைப்பினம். அந்த குறுப்புக்கு புதுசா வாங்கின லவுட்ஸ் பீக்கர்தான் இந்த கர்ணநேசன். அவங்களோட இருக்கேக்க கர்ணநேசனோட இருந்த சில பேர் இப்ப வெத்தில தோட்டத்தில தான் வேலை செய்யினம்.  

கர்ணநேசனும் கதை எழுதிக் கொண்டிருக்கிறான். நினைச்சளவு பிஸ்னஸ் போகல...எதிர்பார்த்த பேமஸ் கிடைக்கல... எத்தின நாளைக்கு தான் இயற்றி இயற்றி எழுதுறது எண்டு நினைச்ச கர்ணநேசன் யாரையாவது பற்றி எழுதுவம் எண்டு நினைக்கிறான். யாரும் கிடைக்கல... கதைஎழுத ஒண்டும் கிடைக்கல.. உடன பேஸ்புக்ல போய் பாக்கிறான்.. அகிலேந்திரன் ஷேபசத்திரன்ட புரொபைல்களுக்க போறான்... அங்க போனா ஒரே ஆச்சரியம்... அட இவங்கள் அவங்களுக்கு எதிரா எழுதுறபடியா தான் நல்லா காசு பாக்கிறாங்கள் எண்டு முடிவெடுக்கிறான். உடன தானும் எழுத தொடங்கிறான். தனக்கு தெரிஞ்ச நாலஞ்ச வச்சு கொண்டு அதுக்கு எதுகை மோனைகள போட்டு வெளில விட்டுப் பாத்தான்... அகிலேந்திரன் ஷேபசத்திரன் குறுப்பில இருக்கிறாக்களிட்ட இருந்து நல்ல வரவேற்பு... அதோட இவனுக்கு தென்பு பிறக்குது.. பிஸ்னஸ்க்கு சிக்கல் வரப்போறதில்ல எண்டு முடிவெடுக்கிறான். அடுத்த கதை எழுதணும்.. என்ன எழுதலாம் எண்டு யோசிச்சவனுக்கு அங்க இருக்கேக்க தன்னோட இருந்திட்டு இப்ப வெத்தில தோட்டத்தில வேலை செய்யிறவன், விமல் எண்ட ஒருத்தன் ஞாபகத்துக்கு வாறன். விமல பற்றி எழுதி அவங்கள குறை சொல்லினா பிஸ்னஸ் ஓடுமெண்டது கர்ணநேசன்ட நம்பிக்க. உடன அவன்ட குடும்பத்த, அவன்ட லவ்வ, எண்டு அவன நாறடிச்சு ஒரு கதை எழுதி புத்தகமடிச்சு வெளியிடப்பண்ணிட்டான். அவனுக்கு நல்ல வருமானம். 

கர்ணநேசன் அவங்களோட பந்தாவ திரியேக்க கொமினிக்கேசன் சென்டர்ல வேலை செய்து கொண்டு திரிந்தவங்கள்தான் ரவியும் சுரேசும். கனநாள் ஆசையா காசு சேத்து ரவி ஒரு புது லப்டொப் வாங்கினான். அதுக்கு மொபிட்டல் டொங்குள் உம் வாங்கி இன்டநெட்டும் போட்டான். சுரேஸ் இன்ட ஆசை மச்சான் முதல்ல பேஸ்புக் போவம் என்றான். ஓகே போனா போச்சு என்று சொல்லியபடி பேஸ்புக்குள்ள என்டர் ஆகிறான் ரவி. ஹோம் பேச்சில முதலாவதா ஒரு போஸ்ட் இருக்கு. சரி படிச்சுபாப்பம் எண்டு ஓபின் பண்ணி வாசிக்கிறார்கள். அப்ப சுரேஸ் கேட்கிறான் யாருமச்சான் இந்த கர்ணநேசன்??? "அவன் விமலோட நிண்டவன் தான்டா" என்கிறான் ரவி... "இவன் என்ன செய்யிறான்" என்று கர்ணநேசனை பற்றி சுரேஸ் திரும்பவும் கேட்கிறான். "இவனும் இப்ப வெத்தில தோட்டத்திலதான் வேலை செய்யிறான்". "உனக்கு கர்ணநேசன ஞாபகம் இல்லையா" என்று அவனை பற்றி சொல்கிறான் ரவி...  முழுவதுமாக உள்வாங்கிய சுரேஸ் " அட அந்த தூத்தேறிச்சனியானா.. வம்பில பிறந்தது.. தன்னைத்தானே கண்ணாடில பாக்காம தன்னோட இருக்கிறவனையே நாறடிச்சு வச்சிருக்கிறானே உறண்டல்....  அவங்களோட இருந்து நல்லா வளந்திட்டு இப்ப வெத்தில தோட்டத்தில வேலை செய்யிற கொழுப்பில தன்னோட வேலை செய்யதவனையே இப்பிடி எழுதி வச்சிருக்கிறானே உறண்டல்.. இப்பயும் சனியன் ஒரே தோட்டத்திலதானே வேலை செய்யிது... என்ன புழைப்புடா இந்த நாய்களுக்கு"... என்று தனது வெறுப்பை உமிழ்ந்து காறித்துப்பினான் சுரேஸ்... ரவியின் புது லப்ட்டொப் கர்ணநேசன் மேல் காறித்துப்பிய சுரேஸின் ஏச்சிலில் நனைந்து கிடந்தது. 

மா.குருபரன் 
15-07-2011

Sunday, May 22, 2011

இசை மீட்டும் நினைவுகள்

2 கருத்துக்கள்


ஜில்லென்று பெய்தோந்த
ஒரு
மழைப் பொழுது...
வீதியெங்கும்
உதிர்ந்து
பரவிக் கிடக்கும்
கொண்டற் பூக்கள்....
குடையைச் சுழற்றி
தூறல்களை தூவியபடி
நீ  சென்ற
சாலை...
மௌனத்தில்
மூழ்கித்தவிக்கும்
எனக்கும் உனக்குமிடையிலான
பார்வைகள்..
நினைக்கும் போதெல்லாம்
இன்னமும்
மனசெல்லாம்
பனி ஊறிய புல்லின்
குளிர்ச்சி.....


மீண்டும் ஒரு தடவை
யாசிக்க வேண்டும்
அந்த நாட்களை.....
மீண்டும் மீண்டும்
தொலைக்க வேண்டும்
இரவுகளை.....


மா.குருபரன்
22-05-2011